தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் வான்படை தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

மாலை 6.30 மணிக்கு பங்கு தந்தை வின்சென்ட் முன்னிலையில் மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆலயத்திலிருந்து வான்படை தளபதி அதிதூதர் மிக்கேல் சொரூபம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, கொடி அர்ச்சிக்கப்பட்டு கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கைகொட்டி, வானவேடிக்கை வெடித்து உற்சாகமாக பங்கேற்றனர். பின்னர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியிலும் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இன்று தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் ஜெபமாலை, நற்கருணை ஆசீர்வாதம் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

வரும் 26ம் தேதி நடைபெறும் 7ம் திருவிழாவில் குறுக்குச்சாலை பங்குத்தந்தை ஞானப்பிரகாசம் தலைமையில் சப்பர பவனி நடைபெறுகிறது.

8ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு அருட்தந்தை வினித் தலைமையில் நற்கருணை பவனி நடைபெறுகிறது.

9ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது.

10ம் திருவிழா வரும் 29ம் தேதி மாலை 6 மணிக்கு உடன்குடி பங்குத்தந்தை பன்னீர் செல்வம் தலைமையில் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.


விழாவில் பங்கு தந்தைகள், உதவி பங்குத்தந்தைகள், அருட்சகோதரிகள் மற்றும் ஊர்பங்குமக்கள் திரளாக பங்கேற்றனர்.

மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ்
“தருவைகுளம் வான்படை தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா ஆன்மிக உற்சாகத்தை மக்கள் மத்தியில் பரப்பி, ஒற்றுமையும், அன்பும், நற்குணங்களும் வளரும் விழாவாக ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு கொடியேற்ற விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றது எங்களை பெருமைப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.