கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வீடுகளை இழந்த ஏராளமான மக்கள் இன்னும் வாழ்க்கையை சீர்படுத்த முடியாமல் தவித்தனர். அந்த நிலையில், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பாரதிய ஜனதா கட்சி முன்வந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வீடுகளை இழந்தவர்களுக்கு புதியதாக ரூ.7 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 10) திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கால்வாய் மற்றும் செம்பூர் நாணல் காடு பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாஜகவின் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு, புதிதாக கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வீடுகள் வழங்கியதோடு, பயனாளிகளுக்கு பசுமாடு வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்காக “செல்வமகள் சேமிப்பு திட்டம்” தொடங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 20-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும் நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துச் சின்னங்களும் கேடயங்களும் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்களால் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பாஜகவின் மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட பொதுச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அணிப்பிரிவு நிர்வாகிகள், மண்டலத் தலைவர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் பங்கேற்றனர்.