தூத்துக்குடி விகாசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வுச் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் இணைந்து ஒருங்கிணைத்த உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு, சுமார் 300 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “மாற்றுத்திறனாளிகளுக்கென தனி நலவாரியம் கலைஞர் ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது. அதேபோல் மாதாந்திர உதவித்தொகையும் அக்காலத்திலேயே வழங்கப்பட்டது. அந்த வழியை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு நவீன திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” என்றார்.

மேலும், “உடல் குறைபாடுகளுக்கு ஏற்ற வகையில் வீல் சேர், மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒருவரும் விடுபடாமல் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து உதவிகள் வழங்க அரசு பணியாளர்கள் களத்தில் செயல்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

ஒன்றிய அரசு ஒதுக்கீட்டை விட தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் துறைக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், “வீட்டு மனை கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தால், இட ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கப்படுகிறது. மேலும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கான நிதியும் வழங்கப்படுகிறது” என்றார்.

விபத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதுடன், அவர்களை பராமரிக்கும் உதவியாளர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். “விபத்து இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். அனைவரின் வாழ்வும் சிறக்க வேண்டும்” என வாழ்த்துக்களுடன் தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், கவுன்சிலர் ஆறுமுகம், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வு சங்க மாநில தலைவர் மருத பெருமாள், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் செல்வகுமரன், கிளை அமைப்பு தலைவர்கள் அற்புதராஜ், மொட்டையசாமி, அய்யனார், ராமகிருஷ்ணன், ஆறுமுகம், பொன்ராஜ், சின்னத்துரை, பிச்சாண்டி, தமிழ்செல்வி, பெரியசாமி, முத்து மாடசாமி, சுல்தான், கமல் ஜவகர், அந்தோணி ராஜ் உள்ளிட்டோர் மற்றும் தூத்துக்குடி காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்க தலைவர் பேச்சிமுத்து, துணை தலைவர் கமல் தனசேகர், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் சின்னதுரை, சகா கலை குழுவைச் சேர்ந்த முனைவர் சகா. சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.