தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15-வது வார்டு பகுதியில் உள்ள செக்கானியா ஜெபத்தோட்டம் சார்பில் 15-வது ஆண்டு கிறிஸ்துமஸ் விழா இபி நகரில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு செக்கானியா ஜெபத்தோட்டம் நிறுவனர் ராஜகுமார் தலைமை வகித்தார். பாதிரியார் ராபின்சன் ஜெபம் செய்தார்.
விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், 100 பேருக்கு சேலை, வேஷ்டி வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், “பாலகன் இயேசு பிறந்த தினமே கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஏழை, எளியவர்களுக்கு செய்யப்படும் உதவிகள் கடவுளுக்குச் செய்யும் அர்ப்பணிப்பாகும். நாம் செய்கிற ஒவ்வொரு உதவியும் அன்பின் வெளிப்பாடாக இருந்து, அனைவரையும் அரவணைத்து நல்வழிப்படுத்துகிறது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி, தோல்வி முக்கியமல்ல; கலந்து கொண்டதே வெற்றி. வாழ்க்கையின் முதல்படியே அதுதான். இதில் குழந்தைகளை ஊக்குவிப்பதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது” என்றார்.
மேலும் அவர், “இந்தியாவில் பெண்கள் அதிக அளவில் உழைக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு குழுக் கடனாக ரூ.35 லட்சம் வரை வழங்கப்படுகிறது. தனிநபராக தொழில் செய்ய ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. அதில் ரூ.7.5 லட்சம் திருப்பிச் செலுத்தினால் ரூ.2.5 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் கடன் வேண்டுமெனில் ரூ.75 ஆயிரம் மட்டும் செலுத்தினால் ரூ.25 ஆயிரம் மானியமாக கிடைக்கிறது. அதேபோல் ஆண்களுக்கு ஆதிதிராவிடர் துறை மூலம் தொழில்கடன்கள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.
“தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 31 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1000 வீதம் பயன் பெறுகின்றனர். ஆண், பெண் இரு பாலருக்கும் கல்லூரி உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இபி காலனி பகுதி 2021க்கு முன் எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சி அமைந்தபின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சாலை, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிக்கு புதிதாக 21 மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும் அவர், “இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 2026ம் ஆண்டு அனைவருக்கும் செல்வ செழிப்புடன், வாழ்க்கைத் தரம் உயர்ந்து சிறப்பாக அமைய வேண்டும்” என வாழ்த்தினார்.
முன்னதாக நடைபெற்ற மியூசிக் கைப்பந்து விளையாட்டு போட்டியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு வெற்றி பெற்றதையடுத்து அவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் பொன்பெருமாள், கவுன்சிலர் கண்ணன், மாநகர திமுக இலக்கிய அணி தலைவர் சக்திவேல், அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், வட்டப் பிரதிநிதிகள் கணேசன், பாஸ்கர், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், பொல்வின் ராஜகுமாரி, விஜயா, ராமஜெயம், தொழிலதிபர் சி.டேவிட் பொன்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக ராபின் நன்றியுரையாற்றினார்.