தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் ஆயத்தப் பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் தனது விருப்ப மனுவை வழங்கினார்.


அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கலாம் என அறிவித்ததை தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகம் எம்.ஜி.ஆர் மாளிகையில் கடந்த 15ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதன் மூலம், தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மட்டுமின்றி, எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டும் எனக் கோரியும் பலர் விருப்ப மனுக்கள் வழங்கி வருகின்றனர்.


இந்த நிலையில், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தெற்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வரும் 23ம் தேதிக்குள் சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் விருப்ப மனு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக, அதிமுக அலுவலகத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், அதிமுக தலைமையகத்தில் தனது விருப்ப மனுவை வழங்கினார். இதனால், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி அரசியல் களம் மேலும் பரபரப்படைந்துள்ளது.