தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி பூபால்ராயர்புரம் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் நேரடி சந்திப்பு, உரையாடல் நடைபெற்றது. அப்போது அந்த வார்டில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்து, அவற்றை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்த வேண்டும். மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய, மக்களை நேரில் சந்தித்து அரசு செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் பேசுகையில்,
“மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தகுதியான மகளிர்க்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கும் உரிய முறையில் இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் பெரும் வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்றார்.
“தேர்தல் நேரத்தில் எத்தனை அணிகள் வந்தாலும், நம்முடைய வாக்கு சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வரும் 20 நாட்கள் தொடர்ந்து மக்களை வீட்டுக்கு வீடு சென்று சந்தித்து, அரசின் சாதனைகளை விளக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், “தூத்துக்குடி மாநகராட்சி முன்பு எப்படியிருந்தது, தற்போது எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை மக்கள் நேரடியாக பார்க்கின்றனர். தெருவிளக்குகள், சாலை வசதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் கூறும் குறைகள் உடனடியாக சரி செய்யப்படும். எஸ்.ஐ.ஆர் பட்டியலின் அடிப்படையில் வீட்டுக்கு வீடு சென்று சந்திக்க வேண்டும்” என்றார்.
அண்ணாநகர், டி.எம்.பி காலனி, சண்முகபுரம், மட்டக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்த பழைய கால்வாய்கள் அகற்றப்பட்டு, புதிய கால்வாய்கள் கட்டப்பட்டு மூடப்பட்ட நிலையில் சிறப்பாக அமைக்கப்படும் என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், வட்டச் செயலாளர் சேகர், கவுன்சிலர் தனலட்சுமி, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், தொமுச நிர்வாகி மரிய பிரான்சிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.