தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற அலுவலகத்தில் இன்று (27.12.2025, சனிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக்கழக (தவெக) தலைவர் விஜய்யின் முன்னாள் மேனேஜரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி. செல்வகுமார் கலந்து கொண்டு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “கடந்த 30 ஆண்டுகளாக விஜய்யுடன் பயணித்தேன். அவரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவன் நான். அவரது தந்தையாருக்கு அடுத்த நிலையில் நான் இருந்தேன். ஆனால் தற்போது என்னை ஓரம் கட்டி விட்டார்கள். இன்று நான் திமுகவில் இணைந்து கட்சிக்காக உழைக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதனால் முழு மனதோடு திமுகவிற்கு உழைப்பேன்” என தெரிவித்தார்.
மேலும் தவெக நிலவரம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், “ஆதவ் அர்ஜுன், செங்கோட்டையன் போன்றவர்கள் யார்? இவர்களுக்கு தவெகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நாங்கள் பார்த்து வளர்த்தவர். அவர்களை பதவியில் அமர்த்தியதே நான்தான். ஆனால் இன்று என்னை சந்திக்க கூட தயாராக இல்லை. தூத்துக்குடியில் தவெக நிர்வாகி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுதான் தற்போது தவெகவில் நிலவும் சூழல்” என்றார். விஜய்யுக்காக உழைத்த பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டிய அவர்,
“அதிமுகவில் 50 ஆண்டுகள் பதவிகளை அனுபவித்த செங்கோட்டையன் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். விஜயின் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் அனைவரையும் ஓரம் கட்டி விட்டார்கள்” என கூறினார்.
தொடர்ந்து, “தற்போது எஸ்.ஐ.ஆர். வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தவெக மாநில நிர்வாகிகள் ஜனநாயகம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்காக மலேசியா சென்றுள்ளனர். ஒருவராவது பூத் கமிட்டி நிலையங்களுக்கு சென்றார்களா? இளைஞர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். தவெகவில் பணம் பெற்றுக் கொண்டே பதவி நியமனம் செய்யப்படுகிறது” என கடுமையாக விமர்சித்தார்.
விஜய் குறித்த தனது கருத்தை வெளிப்படையாக கூறிய பி.டி. செல்வகுமார், “விஜய் தனது தந்தையாரையே பார்க்கவில்லை. அவர் எப்படி தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்பார்? நான் அவருடன் இருந்தவன். அவர் ஒன்றும் செய்யமாட்டார். தமிழ்நாட்டு மக்களிடம் சொல்கிறேன் – விஜய் பின்னாடி செல்ல வேண்டாம்” என தெரிவித்தார்.
மேலும், “ஜனநாயகம் படத்திற்கு தற்போது பிளாக்கில் டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. இதைத் தடுக்க தவெக தலைவர் விஜய் ஏதேனும் அறிக்கை விடுவாரா? விடமாட்டார். அவருக்கு தமிழ்நாட்டு மக்களின் மீது எந்த அக்கறையும் இல்லை” என குற்றம்சாட்டினார்.
இறுதியாக திமுக அரசின் செயல்பாடுகளை பாராட்டிய அவர்,
“பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த திமுக அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பேருந்து போன்ற திட்டங்கள் பெண்களுக்கு பெரும் ஆதரவாக உள்ளன. மேலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கு ஆட்டுக்குட்டி மற்றும் அரசு பை வழங்கப்பட்டுள்ளதும் பாராட்டுக்குரியது” என கூறினார்.