ஒரு புதிய வார்த்தைக்கு பொருள் அறிய அகராதியைத் தேடுவது போல, எந்த ஒரு புதிய வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றாலும் இந்தியாவின் பிற மாநிலங்கள் தமிழ்நாடு அரசின் திட்டங்களைத் தேடி எடுத்துச் செயல்படுத்துகின்றன என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தெரிவித்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற அரசு விழாவில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டம் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.


திராவிட மாடல் அரசின் கீழ் மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை, சமூகநீதி விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னோடியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, நவீன உலகத் தேவைகளுக்கேற்ப மாணவர்கள் டிஜிட்டல் திறன் பெற வேண்டும் என்பதற்காக, “உலகம் உங்கள் கையில்” என்ற அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு மொத்தம் 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், “இன்று நாம் கணினி யுகத்தைத் தாண்டி, செயற்கை நுண்ணறிவு – ஏஐ யுகத்தில் இருக்கிறோம். இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகப் படிப்புடன் மட்டுமல்லாமல், வழங்கப்படும் மடிக்கணினியை கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுய முன்னேற்றத்திற்கு சிறப்பாக பயன்படுத்த வேண்டும். இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையை மாற்றும் கருவியாக இருக்கும்” என்றார்.


மேலும் அவர், “முதல்வரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் முன்னோடி திட்டங்களாக மாறியுள்ளன. அந்த வரிசையில், இப்போது ‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த உயர்வகை மடிக்கணினிகளில், செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கான 6 மாத சந்தாவையும் அரசே வழங்கியுள்ளது. மென்பொருள் உருவாக்கம், தரவு உள்ளீடு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல், வரைகலை வடிவமைப்பு, குறியிடுதல், வலை வடிவமைப்பு, ஏஐ கருவிகள் உள்ளிட்ட பல தொழில்நுட்ப வசதிகள் இதில் உள்ளன. காலத்தை வீணாக்காமல், இந்த வயதில் கல்வி கற்று, அனைவரும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் அரசுப் பொறியியல், கலை மற்றும் அறிவியல், விவசாயம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த 1887 மாணவ, மாணவியர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இணைந்து மடிக்கணினிகளை வழங்கினர்.


நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், துணை மேயர் ஜெனிட்டா, துணை ஆட்சியர் மகேந்திரன், தாசில்தார் திருமணிஸ்டாலின், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் பீட்டர் தேவதாஸ், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.