தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பழைய நகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலும், ஆணையர் ப்ரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையிலும் நடைபெற்றது. மண்டலத் தலைவர் கலைச்செல்வி வரவேற்புரையாற்றினார்.

முகாமைத் தொடங்கி வைத்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி,
“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு உடனடியாக தீர்க்கும் வகையில் இந்த முகாம்கள் கடந்த 16 மாதங்களாக நான்கு மண்டலங்களிலும் சீராக நடைபெற்று வருகின்றன. பொதுமக்களிடையே இதற்கான வரவேற்பு அதிகம் உள்ளது,” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:
“வடகிழக்கு பருவமழை கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் நிலையில் மாநகரத்தின் 60 வார்டுகளில் 58 வார்டுகள் பாதிப்பின்றி இயங்குகின்றன. 16 மற்றும் 17வது வார்டுகளில் மட்டும் சில இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. அவையும் மோட்டார் மூலம் அகற்றப்பட்டுள்ளன. மழைக்காலம் முடிந்ததும் ஜனவரி மாதத்திற்குப் பிறகு சாலை அமைக்கும் பணிகள் துவங்கும்.

மாநகரத்தில் உள்ள விளையாட்டு திடல்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் தேங்கிய மழைநீரும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது கால் சென்டருக்கு 40 புகார்கள் வந்த நிலையில், அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுவிட்டது.

வார்டுகள் 3 மற்றும் 7-இல் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால், அங்கும் மழை காலத்திற்குப் பிறகு சாலைப் பணிகள் துவங்கும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மழையால் சேதமடைந்த பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் பேட்ச் ஒர்க் பணிகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பணிகளும் கண்காணிப்புடன் நடைபெற்று வருகிறது.”

மேலும், கிழக்கு மண்டலத்தில் இதுவரை பெறப்பட்ட 789 மனுக்களில் 769 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், 20 மனுக்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நான்கு மண்டலங்களிலும் மொத்தம் 3200 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

“எந்த புகாராக இருந்தாலும் பொதுமக்கள் கால் சென்டர் அல்லது மேயர், ஆணையர் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சுகாதாரம் அனைவருக்கும் முக்கியம் என்பதால் அதற்கான சிறப்பு முகாம்களும் நடைபெறும்,” என்று மேயர் தெரிவித்தார். பின்னர், பிறப்புச் சான்றிதழ் கோரிய ஒருவருக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணக்குமார், உதவி ஆணையர் வெங்கட்ராமன், பொறியாளர் தமிழ்செல்வன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர் அகமது, நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் நெடுமாறன், இளநிலை பொறியாளர் பாண்டி, உதவி பொறியாளர்கள் அனுசவுந்தர்யா, அபிலாவண்யா, ஹரிகிருஷ்ணன், தொழில்நுட்ப உதவியாளர்கள் சரன்பிரசாத், பிரின்ஸ் பிரதீப், சுகாதார குழுத் தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ராமுஅம்மாள், எடின்டா, பேபி ஏஞ்சலின், மகேஸ்வரி, ரெக்ஸ்லின், மும்தாஜ், மரியகீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.