தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவா எம்பி மீது நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து இன்று தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில்   பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் பனை மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் வைத்து கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.


பெருந்தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் குறித்து திமுக எம்பி திருச்சி சிவா அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினர் திருச்சி சிவாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். திருச்சி சிவா தனது பேச்சுக்கு பகிங்கரமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் திருச்சி சிவா மீது திராவிட மாடல் அரசு ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.


இல்லை என்றால் தூத்துக்குடி வரும் திராவிட மாடல் முதல்வருக்கு கருப்பு கொடி காட்டப்படும் என பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைதொடர்ந்து தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திராவிட மாடல் அரசு முதல்வர் இன்று தூத்துக்குடிக்கு வருகை   தந்தார். அவருக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்த பெருந்தலைவர் மக்கள் நல சங்கத்தினருக்கு காவல்துறை சார்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. முதல்வர் வரும் பாதைகள், மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள், நகரின் முக்கிய வீதிகள் எங்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என எதுவும் செய்யக்கூடாது. என கூறப்பட்டு இருந்தது.  

இதை அடுத்து திராவிட மாடல் முதல்வருக்கு கருப்பு கொடி காட்டும் வகையில் தூத்துக்குடி  கிராம சுற்றுப்பகுதியில் உள்ள பனை மரங்கள் நிறைந்து காணப்படும் காட்டுப் பகுதியில் வைத்து நூதன முறையில் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம், தமிழ்நாடு பனையேறி இளைஞர் சங்கம் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை ஆகிய அமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர்   காமராஜர் உருவப் படத்தை தாங்கியபடி தங்கள் கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு, பனை மரங்களில் கருப்பு கொடிகளை கட்டி திருச்சி சிவாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் திமுக அரசை கண்டித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் கண்டன போராட்டம் நடத்தினர்.