தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு உட்பட்ட பங்குகளில் சில அருட்தந்தையர்கள் அரசியல் சார்பு பரப்புரைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் ஆண்டகை அவர்களிடம் மனு வழங்கியுள்ளது.
அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. சின்னாசி அவர்கள் கையொப்பமிட்டுள்ள மனுவில், “2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தூத்துக்குடி மறைமாவட்டத்தில் சில பங்குகளில் நடைபெறும் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் கவலையளிக்கின்றன. குறிப்பாக, ஆலந்தலை இருதய கெபி திருத்தல இதழான ‘இதய தாகம்’ நவம்பர் 2025 மாத இதழில், ஆசிரியராக உள்ள அருட்பணி குமார் ராஜா அவர்கள் எழுதிய ‘அரசியல் கொஞ்சம், அவியல் கொஞ்சம்’ என்ற கட்டுரை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், மற்ற கட்சிகளை தாக்கும் விதமாகவும் உள்ளது. இது கத்தோலிக்க மக்களிடையே கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இதழ், தூய திருத்தல இதழாக இருக்கும் நிலையில், அங்கு அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவது பொருத்தமற்றது என்றும், இதற்காக அந்த இதழின் ஆசிரியர் அருட்பணி குமார் ராஜா மற்றும் மேலாளர் அருட்திரு. சில்வெஸ்டர் ஆகியோர் பொதுவெளியில் வருத்தம் தெரிவித்து, மறுப்பு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், சில பங்குகளில் அரசியல் கட்சிகளில் பொறுப்புகள் வகிக்கும் நபர்கள் பங்கு பேரவைகள் மற்றும் பங்கு அன்பியங்களில் தலைவர்களாக இருப்பது தவறானது என்றும், இது பங்குகளை அரசியல் மேடைகளாக மாற்றும் அபாயம் இருப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, அரசியல் கட்சிகளில் பொறுப்புகளில் இருப்பவர்கள் பங்கு நிர்வாக பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது:
“அருட்தந்தையர்கள் தங்களின் திருப்பணியில் முழுமையாக ஈடுபட்டு, அரசியல் சார்பிலிருந்து விலகி, மக்கள் நலத்திற்கே சேவை செய்ய வேண்டும். திருச்சபையின் இதழ்கள், பிரசங்கங்கள் அல்லது துண்டுப்பிரசுரங்கள் வழியாக தனிப்பட்ட அரசியல் கருத்துக்களை வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும். இதற்காக தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் அவர்கள் அனைத்து பங்குகளுக்கும் கண்டிப்பான சுற்றறிக்கை அனுப்பி, அரசியல் தலையீட்டைத் தடுக்க வேண்டும்.”
பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம், “திருத்தலங்கள் மற்றும் மறைமாவட்ட பங்குகள் எதுவும் ஒரு கட்சிக்கான அரசியல் மேடையாக்கப்பட கூடாது. எங்கள் சமூக மக்களின் அரசியல் முடிவுகளை அவர்கள் தாங்களே தீர்மானிப்பார்கள். மற்றவர்கள் தங்களின் விருப்ப அரசியலை திணிக்க முயல்வதை எங்கள் சமூகம் ஏற்காது” என எச்சரித்துள்ளது.
தூத்துக்குடியில் வெளியிடப்பட்ட இந்த மனுவில், சமூகத்தின் நலனுக்காக அரசியல் தலையீடு இல்லாத திருச்சபைச் செயல்பாடு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
அருட்தந்தையர்கள் அரசியல் பரப்புரையிலிருந்து விலக வேண்டும் – தூத்துக்குடி ஆயரிடம் பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம் கோரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமையில் ஜெகவீரபுரபுரத்தில் பயணியர் நிழற்குடை பணிகள் தொடக்கம்!!
அடுத்த
முதல்வர் ஸ்டாலின் தொடங்கிய “அன்புச் சோலை” திட்டத்தின் கீழ் — தூத்துக்குடியில் மேயர் ஜெகன் திறந்து வைத்தார் முதியோர் மனமகிழ்வள மையம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026