தூத்துக்குடியில் பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் தமிழ்நாடு மாநில நிர்வாக குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அபிராமி கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார், துணை தலைவர் ராஜேஷ், துணை செயலாளர் ஜெபசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய தலைவர் காளிதாசன் சிறப்புரையாற்றினார். மாநில மகளிர் அணி அமைப்பாளர் கலா வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் சிறிய பரிசோதனைக்கூடங்களின் நலன், ஆய்வக நுட்பனர்களின் உரிமைகள் மற்றும் அரசு நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சிறிய பரிசோதனைக்கூடங்களை நடத்துவதற்கு தற்போது வெளியிடப்பட்ட அரசாணை எண் 390-ஐ ரத்து செய்ய வேண்டும் எனவும், கிராமப்புறங்களில் 100 சதுர அடி, நகர்ப்புறங்களில் 150 சதுர அடி என்ற அளவீட்டில் புதிய அரசாணை வெளியிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மருத்துவக் கழிவு கட்டணம் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக ரூ.1000 என நிர்ணயம் செய்து, உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி மூலம் அரசு நேரடியாக நிர்வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆய்வு செய்ய வரும் அரசு அதிகாரிகள் எந்தெந்த சான்றிதழ்கள் அவசியம் என்பதனை விளக்கும் தெளிவான அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மாநில அரசு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், மருந்து கடைகளில் இரத்த பரிசோதனை செய்வதை முழுமையாகத் தடுக்க வேண்டும், மத்திய அரசு ஆய்வகங்களுக்கு விதித்துள்ள ஜிஎஸ்டி-யை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. மத்திய அரசு ஆய்வக நுட்பனர்களுக்காக கொண்டு வந்துள்ள யுஹெச்ஐடி (UHI-ID) முறையை சங்கம் ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் கல்வித் தகுதியை காரணமாகக் கொண்டு ஆய்வக உரிமையாளர்களை வெளியேற்ற முயற்சிப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறிய பரிசோதனைக்கூடங்களை நசுக்கும் நோக்கில் மருத்துவர் சான்றிதழ் கட்டாயம் என்ற நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ஆய்வக பதிவு கட்டணமாக ரூ.5000 என அறிவிக்கப்பட்டதை ரூ.1000 ஆக குறைப்பதாக அமைச்சர் வாய்மொழியாக அறிவித்ததை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள அலைடு ஹெல்த் கவுன்சிலில் பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்திற்கு நிரந்தர உறுப்பினர் அங்கீகாரம் வழங்க வேண்டும், ஆய்வக நுட்பனர்களுக்கான சீருடையை வெள்ளை நிற கோர்ட் சீருடையாக அறிவித்து மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அணிய அரசாணை வெளியிட வேண்டும், ஆய்வக நுட்பனர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
அரசுத் துறைகளில் உள்ள ஆய்வக நுட்பனர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வக நுட்பனர்களை பரிசோதனைக்கு அப்பாற்பட்ட பணிகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆய்வக நுட்பனர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
வரும் மார்ச் 13-ஆம் தேதி 27-வது ஆண்டு ஆய்வக நுட்பனர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சங்கக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, இலவச மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதேபோல் கிரிக்கெட், ரிங்பால், கேரம், செஸ் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆய்வக நுட்பனர்களின் உரிமைகளை காக்க 2026 பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலத் தலைவர் தியாகராஜன், மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார், மாநில பொருளாளர் ஆறுமுகம், அகில இந்திய துணைத் தலைவர் துரைசாமி, மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் சம்பத்குமார், மாநில துணைப் பொதுச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மாநில துணை செயலாளர்களாக பாலாஜி, கோபி, சதீஷ், ஜெதீஸ்வரன், சுந்தர், சிவகுமார் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்டனர்.
என்ஏபிஎல்சிஇஓவாக இருந்து சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை காப்பாற்றும் வகையில் சேவை செய்த வெங்கடேஸ்வரன், என்.ஏ.பி.சி.யின் சிஇஓவாக பதவி உயர்வு பெற்று சென்றதற்கும், சிஎம்சி இக்யூஏஎஸ் கோஆர்டினேட்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் பமிலா கிறிஸ்துதாஸுக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.
கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக மாவட்ட செயலாளர் மைக்கேல் பிரதீப் நன்றியுரை வழங்கினார்.