தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும், திட்டக்குடி விபத்து தொடர்பாக ஓட்டுநர்மீது போடப்பட்ட FIR-ஐ உடனடியாக ரத்து செய்யக் கோரியும் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் (CITU) சார்பில் இன்று (டிசம்பர் 30) தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு லிமிடெட் பணிமனை முன்பு எழுச்சியான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி பணிமனை தலைவர் மாரிராஜ் தலைமை தாங்கினார். ஜோசப், கதிரேசன் நல்ல பெருமாள், மாவட்ட துணை செயலாளர் பிச்சை மணி, சம்மேளன குழு உறுப்பினர் சிவக்குமார், செந்தில்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கடுமையாக கண்டித்து உரையாற்றினர். பணிமனை இணை செயலாளர் தர்மராஜ் நன்றியுரை நிகழ்த்தினார்.


ஆர்ப்பாட்டத்தில் பேசிய CITU நிர்வாகிகள், SETC கழகத்தில் பேருந்து பராமரிப்பு முற்றிலும் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக குற்றம்சாட்டினர். கடந்த 26 ஆண்டுகளாக தொழில்நுட்ப பிரிவில் புதிய நியமனங்கள் இல்லாததால் பராமரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், உயர் அதிகாரிகளின் உத்தரவால் டயர் ரொட்டேசன் பணிக்கு கிளை அதிகாரிகள் மாற்றப்பட்டதன் காரணமாக டயர் பராமரிப்பு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக சுட்டிக்காட்டினர்.


தொழிலாளர்கள் கடிதங்கள் மற்றும் தகவல் பலகைகள் மூலமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், புதிய பேருந்துகள் வரவிருப்பதை காரணமாக காட்டி டயர் வாங்குவதை கைவிட்ட நிர்வாகத்தின் தவறான முடிவே இன்றைய நெருக்கடிக்கு காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதன் விளைவாக நூற்றுக்கணக்கான டயர்கள் வெடித்து விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.


திட்டக்குடி பகுதியில் நடைபெற்ற விபத்துக்கு குறைபாடான டயரே காரணம் என்றும், நிர்வாகத்தின் தவறுகளை மறைத்து ஓட்டுநர்மீது FIR பதிவு செய்தது அநியாயம் என்றும் CITU தெரிவித்தது. எனவே, ஓட்டுநர்மீது போடப்பட்ட FIR-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், விபத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


மேலும், பணியாளர் பற்றாக்குறை, தரமான உதிரி பாகங்கள் வழங்கல், தனியார் மயத்தை கைவிடுதல், கூடுதல் பணி சுமை குறைத்தல், பழைய ஓய்வூதியத் திட்டம், அநியாயமான தண்டனைகள் மற்றும் பணி இடமாற்றங்களை ரத்து செய்தல், தற்காலிக பணி நீக்கம், ஆப்சென்ட் பிரச்சினைகளுக்கு தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.