தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், வரைவு வாக்காளர் பட்டியல் சீராய்வு தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பங்கேற்றார்.


சென்னை முகாம் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் 15 சதவீத வாக்காளர்கள், சுமார் 97 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இடம் பெயர்ந்தவர்கள் என்ற காரணம் கூறி மட்டும் 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.


எஸ்ஐஆர் (SIR) பணிகள் தொடங்கிய போதே இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும், தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் திமுக முன்கூட்டியே எச்சரித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதையும் அவர் நினைவூட்டினார்.


இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல்களை மாவட்ட செயலாளர்கள் மிகுந்த கவனத்துடன் சீராய்வு செய்து, தகுதியான எந்த வாக்காளரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார். இனி எந்தவித தளர்வும் இன்றி முழு அசுரப்பலத்துடன் களத்தில் பணியாற்ற வேண்டும் என்றும், சிறிது அசந்தாலும் பாஜக – அதிமுக சதி முயற்சிகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.


மேலும், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர் கீதாஜீவனிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். தகுதியான அனைத்து வாக்காளர்களையும் புதிய படிவங்கள் மூலம் உடனடியாக இணைக்க வேண்டும் என்றும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு பிஎல்ஏ–2 மற்றும் பாக முகவர்கள் புதிதாக நியமனம் செய்து பணிகளை முறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதாஜீவன், மாநிலம், மாவட்டம், மாநகரம், ஒன்றியம், நகரம் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், களத்தில் பணியாற்றி வரும் பிஎல்ஏ–2 மற்றும் பாக முகவர்களுக்கும் தேவையான தகவல்கள் வழங்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் சீராய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.