தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா கடைநடை கிராமம் தடியன் காலனி நகரில், பட்டியலின பழங்குடி மக்களுக்கு சொந்தமான பொது விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.


கடைநடை கிராமம் தடியன் காலனி நகரில் சர்வே நம்பர் 127-ல் அமைந்துள்ள சுமார் 40 சென்ட் பரப்பளவுடைய இந்த நிலம், பல நூற்றாண்டுகளாக அக்கிராம மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு கிராம இளைஞர்கள் விளையாடுவதற்கும், பொது நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், ஏரல் வட்டாட்சியாளர் அலுவலகம் மூலம் அந்த நிலத்தில் வெளி கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களுக்கு பட்டா வழங்க முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் திரண்டனர்.


தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் சாமு காந்தி தலைமையில், கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமன், கிராம பெரியோர்கள் மற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்கினர்.


மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த உறுதி கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


இதனைத் தொடர்ந்து, பொதுப் பயன்பாட்டிற்காக கிராம மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் நிலத்தை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் முயற்சியை ஏரல் வட்டாட்சியாளர் கைவிட வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் சாமு காந்தி வலியுறுத்தினார்.


பட்டியலின பழங்குடி மக்களின் உரிமைகளையும், கிராமத்தின் பொது சொத்தையும் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்துள்ளனர்.