தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள ஏ.எம்.எம். சின்னமணி நாடார் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு ஒன்றாகப் படித்த மாணவர்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒன்றுகூடி நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்த பழைய மாணவர் சந்திப்பு அக்டோபர் 4, சனிக்கிழமை அன்று பள்ளி வளாகத்திலேயே மகிழ்ச்சியான சூழலில் நடைபெற்றது. இருபது ஆண்டுகளுக்கு பின் பழைய நண்பர்கள், ஆசிரியர்கள், வகுப்பறைகள் – எல்லாம் மனதை நெகிழச் செய்தது.

அனைவரும் தாங்கள் படித்த வகுப்பறைக்குச் சென்று, அதே பெஞ்சில் அமர்ந்து பழைய நாட்களை நினைவு கூர்ந்தனர். “அந்த நாட்கள் மீண்டும் வந்து விட்டதுபோல் இருந்தது,” என்று பலர் உருக்கமாக கூறினர்.

நிகழ்ச்சியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு பழைய நினைவுகளை மீண்டும் பகிர்ந்து கொண்டனர். புகைப்படங்கள் எடுத்து சிரிப்பும் கண்ணீரும் கலந்து நிறைந்த அந்த சந்திப்பு, அனைவரின் மனதிலும் மறக்க முடியாத நிமிடங்களாக பதிந்தது.

முடிவில், மீண்டும் இப்படிப்பட்ட சந்திப்பை தொடர்ச்சியாக நடத்துவதற்கான முடிவும் எடுக்கப்பட்டது.